Sunday, September 6, 2009

ஓணம் பண்டிகையில் சபரி மலை யாத்திரை... பாகம் 2

part 1

குளிர் காற்று.. பயண களைப்பு.. அதிகாலை முழிப்பு.. அமைதியான சூழல்..உள்ளே போன உணவு..இதெல்லாம் சேர்ந்தால் என்ன வரும்??

ஆம்..தூக்கம் வரும்...


தூங்குவதிலேயே மிக நல்ல தூக்கம்.. எப்போது தூங்கினோம் என தெரியாமல் தூங்குவது.. அப்படி தூங்கினோம் கிட்டத்தட்ட அனைவரும்..

திடீரென சில மழைத்துளிகள் சிதறியது முகத்தில்.. எழுந்தவனுக்கு கண்களை நம்ப முடியவில்லை..

இத்தனை அழகையும் ரசிப்பதை விட்டு விட்டு என்ன டா தூக்கம் என சாஸ்தா கேட்பது போல் இருந்தது..

நேரே எருமேலியில் நிறுத்தினோம்.. அங்கே தர்ம சாஸ்தாவை வழிபட..

பேட்டை துள்ளினோம் ... முகத்தில் வண்ணம்.. கையில் சரம்குத்தி.. செண்ட மேளம்...
என்ன ஒரு உற்சாகம்?

அங்கே இருந்து நேராக அய்யனின் தோழராம் வாவர் சன்னதிக்கு சென்றோம்.. மத நல்லிணக்கத்தை அங்கே பார்க்கலாம்..

அங்கே இருந்து மீண்டும் பயணம்... இப்போது மலைப் பாதை வழியாக எங்கள் பேருந்து சென்றுகொண்டு இருந்தது...

பள்ளத்தாக்கு ... அங்கங்கே தெரியும் பம்பை.. சின்ன சின்ன அருவிகள்... அமைதி.. ஆனந்தம்..

பம்பை வந்தது... குளிக்க இறங்கினோம்...இந்த முறை படித்துறை வழியாக அல்லாமல் நேராக திரிவேணி நோக்கி சென்றோம்..என்ன அற்புதமான குளியல்.. சென்னையில் குளிக்கும் குளியலை நினைத்தேன்.. சிரித்தேன்..

அருமையான அரை மணிநேர குளியலை முடித்துக்கொண்டு புறப்பட்டோம் மலையேற...

நீலிமலை ஏற்றம் நோக்கி நடந்தோம்..

அப்போது தூர ஆரம்பித்தது மழை...

பயணம் தொடரும்...

Saturday, September 5, 2009

ஓணம் பண்டிகையில் சபரி மலை யாத்திரை... பாகம் 1

வருடா வருடம் சபரிமலை செல்வது கடந்த மூன்று வருடமாக அந்த ஐயப்பன் புண்ணியத்தில் நடக்கிறது..

இந்த வருடமும் சபரிமலை சென்றோம்.. எங்கள் குழு ஓணம் பண்டிகை நடைதிறப்பு நாட்களில் தான் செல்வது வழக்கம்..

காரணம்.. கூட்டம் கம்மியாய் இருக்கும்.. தரிசனம் நீண்ட நேரம் கிடைக்கும்...

எங்களுடைய குழுவுக்கு குருசாமி ஜம்பு சாமி.. ரொம்ப நல்ல நல்லவர்.. (பின்ன எங்கள எல்லாம் மேச்சுகிட்டு வலிக்காத மாதிரியே அவரும் வந்தாரே..)

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில் தான் எங்கள் புறப்படு தலம்...

இந்த முறை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இல் பயணம் செய்து எர்ணாகுளத்தை அடைந்தோம்.. அப்போது மணி மூன்று..

நினைச்சு பாருங்க தூறும் மழை.. நடுங்கும் குளிர்.. இருட்டு... உடனே அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்த ஒரு பஸ் மற்றும் ஒரு வேன் தயாராய் இருந்தது.. ஏறினோம்..

சிறிது நேரம் கண் அயர்ந்த பிறகு பஸ் நிறுத்தியது சொட்டாணிகரையில் அங்கே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு சோட்டணிகரை பகவதியை தரிசிக்க சென்றோம்..

ஓணம் நேரமானதால் கொஞ்சம் கூட்டமும் இருந்தது.. நடை இன்னும் திறக்கவில்லை..நாமும் காத்துக்கொண்டு இருந்தோம் பகவதியை பார்க்க..

நடை திறந்து அம்மன் தரிசனம் கிடைத்தது.. மனம், கண்கள் நிறைந்தன... பிரகாரம் சுற்றும் போது தான் அங்கே நிறைய மனநிலை குன்றியவர்களை கோவிலில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதை ஞாபகப் படுத்திக் கொண்டேன்..

ஒரு பெண் பதினைந்து பதினாறு வயது கண்ணுக்கு லட்சணமான குழந்தை.. பிரகாரத்தை

அம்மே நாராயணி... லக்ஷ்மி நாராயணி ...

என்று சுற்றி வந்து கொண்டு இருந்தாள்.. திடீர் என்று "எடுக்கண்டே..." என்றோ என்னமோ கத்தினாள்.. அப்போது தான் அருகில் அவர் அப்பாவைப் பார்த்தேன்.. அப்பவாகத் தான் இருக்கமுடியும்.. கண்ணில் தெரிந்த இவளை சீக்கிரம் குணப்படுத்து தாயே என்ற வேண்டுதல்.. அதை உணர்த்தியது..

கொடிமரம் பக்கத்தில் விழுந்து கும்பிட்டவள் பக்கத்தில் இருந்த கண்ணாடியை பார்த்து "இவ்விட கண்ணாடி உண்டே.. ஞான் கண்டிட்டள்ளலோ.." என்று அவளை கண்ணாடியில் அவளே ரசித்தாள்.. சிரித்தாள்.. விரலில் அபிநயம் பிடித்தாள்.. அப்போது நானும் இவளை சீக்கிரம் குணப்படுத்து தாயே என்று வேண்டினேன்..

image courtesy: www.exoticindiaart.com

பின்னர் அங்கே இருந்து கிளம்பி நேராக வைக்கம் வந்து சேர்ந்தோம்.. அருமையான கோவில் ..
மிகப் பிரம்மாண்டமாய் கேரள முறைப்படியான கோவில்.. அங்கேயும் அருமையான தரிசனம்..


image courtesy: http://cs.nyu.edu/

கண்ணையும்
மனதையும் நிரப்பினால் போதுமா ? வயிறையும் நிரப்ப வேண்டாமா ? அங்கே இருந்த ஒரே ஹோடேலில் வயிறை நிரப்பிக் கொண்டோம்.. அங்கே நான் அனுபவித்தது தான் என் நண்பன் அடிக்கடி சொல்வது புரிந்தது...

Keralites in Other part of World...
"They work very hard"

Keralites in Kerala...
"They work hardly"

அப்படித் தான் இருந்தது கவனிப்பு..

மறுபடியும் வண்டி ஏறினோம்... இப்பொது வண்டி பம்பையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது...

அந்த வழியில் கண்டவை மெய் என்ன பொய்யைக் கூட சிலிர்க்க வைக்கும்... பச்சை நிறத்தை குத்தகை எடுத்தது போல எங்கும் பச்சை..

அப்போது தான் பொழிந்த மழையில் எல்லா இலைகளிலும் பச்சை.. பச்சை எங்கும் பச்சை.. தவழும் மேகம் ஹாய் சொன்னது...

வழியெங்கும் ரப்பர் மரங்கள்... சில சில ஓடைகள்.. சில்லென்று காற்று.. வித விதமான பறவைகள் சத்தம்.. இது தான் கடவுளின் தேசம் என நினைக்க வைத்தது..

பயணம் தொடரும்....

Friday, August 28, 2009

Quick Gun Murugan - விமர்சனம் I say...


ஒன்னரை மணி நேரம் சிரிக்க ஆசையா?

எழுவது எண்பதுகளில் வந்த படங்களின் ஸ்டைலில் ஒரு காமெடி படம் பார்க்க ஆசையா?

படத்தில் நடித்திருக்கும் எல்லாருமே சீரியஸ் ஆக நடிக்கும் போது நமக்கு காமெடி கரை புரண்டு ஓடுகிறது...

Action, Sentiment, Dance, Dialogues, வீரம், விவேகம், என ஒரு படத்தில் எல்லா விசயங்களும் காமடி சொட்டுகிறது...

Quick Gun Murugan...

ஒரு தமிழ் கௌ பாயின் கதை...

தமிழ்நாட்டில் கவ்பாய் படம் எல்லாம் அதிகம் கிடையாது (நம்ம ஜம்பு போன்ற படங்களை தவிர... இப்போது இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாரிப்பில் உள்ளது...)

இந்த படம் அருணாசலத்தில் செந்தில் சொல்வது போல் " இது முழுக்க தமிழில் எடுக்கப்படும் ஒரு ஆங்கில திரைப்படம்.."

படத்தின் பலம்.. Dr. ராஜேந்திர பிரசாத்.. அவர் படத்தில் எனக்கு "ஆ நலுகுறு " ரொம்ப பிடிக்கும்.. நல்ல நடிகர்.. இந்தப் படத்தில் சிரிப்பாக சிறப்பாக செய்துள்ளார்..

அவருடைய வசனங்கள் தான் "Guntastic Dialogues"

கதை எல்லாம் எதிர் பார்த்து போக மாட்டிர்கள் என அறிவேன்.. ஆனால் ஒரு டயலாக் விடாம கேளுங்க மக்களே...


" நீ இடி மின்னல்னா நான் 250 Volts current I say...."

" You better run a telephone booth I Say..."

" Gun a கீழ போட்றா..."

இந்த வசனத்தை எல்லாம் படத்துல கேட்டு பாருங்க தெரியும் சேதி..

அப்பறம் அந்த தென்னைமர பைட் நம்ம இலயதளபதிக்கே சவால் விடுது.. அதிலேயும் தென்னங் காய புல்லட் உடைக்கிற சீன் சூப்பருப்பு...

என்ன தான் சொல்லவந்தாலும் என்னால ஒன்னும் சொல்ல முடியல..

அருமையாய் நடித்துள்ளார்கள் எல்லாரும்.. நாசர், ராஜு சுந்தரம், ரம்பா, எல்லாரும் கலக்கி இருக்கிறார்கள்..

பாருங்க என்ஜாய் பண்ணுங்க I Say...

Thursday, July 30, 2009

அர்த்தம் புரியவில்லை.. அனுபவம் பழையதில்லை.. கவுஜ

கிட்டப்பார்வையில்
கிறங்கும் ஆவியில்
வட்டப்பாறையில்
வருடும் காற்றினில்
நெட்டு நீள் வளர்
செவ்விளநீர் தளர்
ஓட்டும் ஈரமாய்
உயிரின் ஓரமாய்
சொட்டும் நீரினில்
சொருகும் காதலில்
வெட்டும் வேல்விழி
வெட்கப் போர் கழி
தட்டும் தரையோடு
தழுவும் கரத்தோடு
பார்வை பதறியதே
பற்கள் இறுகியதே
நாவும் நடனத்துடன்
நீட்டி முழக்கிடவா
என்றே கேட்கிறதே


என்ன இவையெல்லாம்
எனக்கே தெரியவில்லை
அர்த்தம் புரியவில்லை
அனுபவம் பழையதில்லை
காதலை சொல்ல வந்தால்
கவிதை வந்திடுமோ?
அர்த்தம் ஒன்றுமின்றி
வந்தால் குறைந்திடுமோ?
காதலை ஏற்றிடு வா..
அதையும் கற்று மறப்போம்..

முதல் பாதி கவுஜ 'பிரபல' பதிவர் ஆகும் முயற்சியில் எழுதியது.. எனக்கே புரியவில்லை.. நிஜமாக..
இரண்டாம் பாதி முதல் பாதியை justify செய்வதாக எழுதி உள்ளேன்..

Tuesday, July 21, 2009

திகில் கதையில் ஒரு விடுகதை...

நிஜன்யன்...

பிரபல எழுத்தாளர்.. திகில், மர்மங்கள், ஆவி, அமானுஷ்யம் இவை இவரின் கதைக் களம்..

இவரின் கதை எழுதும் பாணியே வித்யாசமானது தான்...

வீடு? தத்தனேரி சுடுகாடு தெரியுமா? அதில் எரியும் பிணங்களை இவர் வீட்டில் இருந்து பார்க்கலாம்...

தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு தான் கதை எழுத ஆரம்பிப்பார்..

ஒரு செம்பு பால் , ஒரு டைரி , அந்த டைரியில் ஒரு சிவப்பு மை பேனா.. இது தான் அவர் கதைக் கருவிகள்..

எகிப்திய நாகரிகம் மற்றும் மம்மிக்களை நம்பும் ஆசாமி.. அதனாலேயோ என்னமோ ஒரு பூனை வளர்க்கிறார்.. அதுவும் சாதாரண பூனை போல் அல்லாமல் ஒரு சின்ன பொமேரியன் நாய் குட்டி போல இருக்கும்..

அன்று அதே போல் கதை எழுத உட்கார்ந்தார்..

காலண்டர் அம்மாவாசை என அந்த நாளை சொன்னது....

எதோ ஒரு விதமான இறுக்கம் அவரை சூழ்ந்து இருப்பதை உணர்ந்தார்..

என்றும் இல்லாத இறுக்கம்.. இன்றைக்கு??

மணி பதினொன்று ஐம்பத்தி ஐந்து..

பால் செம்புடன் டைரி மற்றும் பேனாவை மேஜையில் வைத்தார்..

டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங் . டிங்.. டிங்.. டிங்.. டிங்.. டிங்..

பன்னிரண்டு மணி அடித்தது...

தூரத்தில் ஒரு நாயின் குரல்.. அது குலைப்பதாக தெரியவில்லை...

ஒரு வேதனை கலந்த ஒரு குரலில் அது ஊளையிட்டது..

உட்கார்ந்தார்.. எழுத ஆரம்பித்தார்.. ஒரு பக்கம்.. மிக சீக்கிரமாக முடிந்திருந்தது..

பக்கம் முழுவதும் ரத்தத்தால் எழுதியது போல சிவப்பு எழுத்துக்களால் நிரப்பி இருந்தார்...

சில்லென அப்போது ஒரு காற்று...

உடம்பை மட்டும் அல்ல... எலும்பையும் ஊடுருவும் குளிர் கொண்ட காற்று..

ஜன்னல்கள் அடித்துக்கொண்டன.. திரைச் சீலைகள் பரபரத்தன..

மெதுவாக ஒரு அழுத்தமான மனநிலையுடன் எழுந்து ஜன்னலை மூடச்சென்றார்..

டங்க்....

ஒரு பெரிய சத்தம்.. திரும்பி பார்த்தார்.. அவர் வளர்த்த பூனை மேஜைமேல் ....

பால் சொம்பு தரையில் உருண்டு கொண்டு இருந்தது ..

விகாரமாய் பார்த்து அந்த பூனை..

இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் தவ்வி மேலே ஏறி காணமல் போனது,,,

அங்கே டைரி மேல் பால் கொட்டிக்கிடந்தது...

அது என்னவாகி இருக்கும்?? யூகிக்க முடிகிறதா??




விடைக்கு,,,
இங்கே மௌஸ் கொண்டு ப்ளாக் செய்து பார்க்கவும்...

>>>சாதரண மில்க் டைரி மில்க் ஆகி இருக்கும்...<<<



பதிவுலகமும் அரசியலும்... ஒரு புது பதிவனின் புலம்பல்..

எல்லாருக்கும் வணக்கம் அண்ணே..

நான் கொஞ்சம் புது ஆளு.. சில நேரம் பதிவுலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியல.. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பதிவ படிச்சிட்டு இருந்த ஒண்ணுமே புரியல அதுக்கு சில மறைமுக பின்னூட்டம் சில பேர் போட்டு இருந்தாங்க..

சரி இந்த கதை நமக்கு தெரியாதுன்னு கெளம்பிட்டேன்...

அப்பறம் சில பல பதிவுகள் அப்படியே பார்க்க முடிந்தது..

இதுல ஒண்ணுமே புரியலண்ணே .. புது பதிவர்ன்றான் பிரபல பதிவர்ன்றான்.. புது பதிவர் போடுற பதிவுல பிரபல பதிவர்கள் பின்னூட்டம் போடலன்றான்..

செட்டு சேர்ந்து சுத்துறான்றான்... பொண்ணுங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடுறாங்கன்றான்.. தல சுத்துது சாமி..

இதுல எனக்கு சில விஷயம் புரியல..

எல்லா பிரபல பதிவர்களும் ஒரு காலத்தில் புது பதிவர்கள் தான்...

நல்லா எழுதுன யாரு வேணும்னாலும் பிரபல பதிவர் ஆகலாம்ல? அதே நேரத்துல பெருசுங்க எல்லாரும் கொஞ்சம் சிறுசுங்கள உற்சாகப் படுத்தலாம்ல?

அப்பறம் எதுக்கு இந்த சண்டை? ஆனப்பா சில பின்னூட்ட போர்களை படிக்கும் போது செம ஜாலியா இருக்கு.. ஆனா சில பேர் அதனால hurt ஆவுறாங்க.. அதையும் நாம நெனசுக்கணும்..

அதே மாதிரி அவங்க அவங்க பதிவுல அவங்க அவங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. அது கூகிள் ஆண்டவர் குடுத்த சுதந்திரம். நல்லா இருந்த பாராட்டுங்க.. நல்லா இல்லையா குறைய சுட்டி காட்டுங்க உங்க உண்மையான முகத்தோட..

அத விட்டுட்டு அனானி பின்னூட்டம் அசிங்கமா போடுறத தவிருங்க.. சரி நீங்க சுட்டிக் காட்டியும் ஒன்னும் பலனில்லையா.. விட்டுடுங்க என்னவோ எழுதிட்டு போறாங்க.. அந்த பக்கமே போகதிங்க..

அப்பறம் யாரும் என்ன தப்பா நினைக்க வேணாம்.. எதோ எழுதனும்னு தோணுனத எழுதிபுட்டேன் அவ்ளோதான்..

ஒவ்வொரு பதிவருக்கும் ஒவ்வொரு பீலிங் ...

Friday, July 17, 2009

குலைநடுங்கும் கொலை.. ஒரு திகில் கதை...

மணியை பார்த்தான் இரவு இரண்டு மணி..

ஹைதராபாத் பனிகால குளிர் இரவில் குளிர் இன்னும் அதிகமானதை உணர்ந்து இருந்தான்.. ஆனாலும் வியர்வை பூத்து இருந்தது..

நடையின் வேகத்தை கூறினான்.. தூரத்தில் ஒரு நாய் குலைத்தது..

அது ஒரு செயின் ரியாக்சன் போல அவன் அருகில் இருந்த நாயை குலைக்க வைத்தது..

காறி எச்சிலை துப்பினான் .. எச்சில் துப்பினால் நாய் பின் தொடராது என்று யாரோ சொல்லி கேட்டு இருந்தான்...

கையில் மட்டும் அது பத்திரமாக.. ச்சே போட்டோகிராபர் தொழிலுக்கு ஏன் தான் வந்தோமோ? நொந்து கொண்டேன்

விடிந்ததும் என்னை தேடுவர்களா? கண்டு பிடித்தால் உயிருடன் விடுவார்களா? நினைக்கும் போது சில்லிட்டது...

உங்களுக்கு தெரிந்திரிக்கும் ஏன் கையில் உள்ளது ஒரு கேமரா..

இரண்டு மணி நேரம் முன்னால்...

இரவுக் காட்சி முடித்து விட்டு வந்து கொண்டு இருந்தவன் ஒரு சத்தத்தை கேட்டு நிமிர்ந்தான்..

அகால வேளையில் ஒரு அனத்தும் சத்தம்..

உடலுறவு கொள்கிறார்களா? விவகாரமான சிந்தனை முளைத்தது..

ஒரே ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்தது.. எட்டி பார்கலாமா? என்னுடைய பகுதி நேர பத்திரிகையாளன் மூளை வேலை செய்தது..

சாக்கடை எங்காவது திறந்திருக்கும், போலீஸ் காரன் யாரவது லஞ்சம் வாங்குவான் என எந்த நேரத்திலும் எதாவது படம் பிடிக்கலாம் செய்தி ஆக்கலாம் என்று எப்போதும் என் உடன் இருக்கும் ஒரு சின்ன கேமரா எனக்குள் கனத்தது...

எட்டி பார்த்தேன்.. இப்போது தனியாக உள்ள வீட்டில் விளக்கெரியும் அறை நோக்கி சென்றேன்.. வேலிச் சுவர் மேல் நின்றேன் ..

"வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்"


எங்கோ படித்த நினைவு.. சாளரத்தை பார்த்தேன்..

ஜன்னல் மேல் உள்ள மழை தடுப்பு சுவர் மேல் ஏறி நின்றேன்.. ஆம் உண்மை தான்..
வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்

நான் பார்த்தது இரண்டு ஆசாமிகள் ஒரு பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்கள்..

அதை இன்னும் இருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்..

சிவப்பு பனியன் அணிந்த ஒருவன் அந்த பெண்ணை பார்த்து சொத்து பத்திரத்தில் கைஎழுத்து போட மாட்டே? என்றபடி கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தான்.. பக்கத்தில் கத்தை பேப்பர் அட்டையில் கிளிப் செய்யப்பட்டு இருந்தது...

சிலிர் என்று எங்கோ இருந்து வந்த காற்று என்னை ஊடுருவியது...

உடனே கேமரா எடுத்தேன்..

கிளிக்..

கிளிக்...

நழுவியது கேமரா..

நல்லவேளை பிடித்துக் கொண்டேன்..

மறுபடி கிளிக்.. அட நழுவும் போது பிடித்ததில் பிளாஷ் ஆன் ஆகிவிட்டது...

அதில் ஒருவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

ஹெய்.. நில்லு.. உன்னதான்... அந்த சிவப்பு பனியன் என்னைபார்த்து கத்தினான் ...

அவன் ஓடி வர எத்தனிப்பது தெரிந்தது..

ச்சே ... இங்கேயுமா தமிழ் ரௌடிகளிடம் மாட்ட வேண்டும்?


ஏறிய வழியில் இறங்கி.. ஓட ஆரம்பித்து ,

இதோ இரண்டு மணிநேரம் ஆயிற்று..

அதோ என் அறை தெரிகிறது.. உங்களிடம் அடுத்து பேசுகிறேன்.. நான் தூங்க வேண்டும்...

சரியாக ஆறு மணி நேரம் கழித்து..

நான் சரியாக உறங்க வில்லை என சொல்ல வேண்டியது இல்லை..

இதோ உடை மாற்றி ஒரு புது வித மேக்கப் செய்து கொண்டு வெளியே வந்தேன்...

மனதுக்குள் ஜெம்ஸ் பாண்ட் படத்தில் வரும் இசை..

அந்த தெருவுக்கு போனேன்.. இப்போது நான் போனது என் நண்பனிடம் இரவல் வாங்கிய யமகாவில் ..

அதோ அந்த சிவப்பு பனியன் போடடிருன்த்தவன்.. இப்போது வெள்ளை சட்டையில்..

ஐயோ என்னைப் பார்த்து விட்டான்... அவனை தாண்டி சென்று அவனை திரும்பி பார்த்தேன்..

டேய் தரணி அவன புடி.. சொல்லியது காதில் விழுந்தது...

ஆனால் என் பின்னால் பார்த்தபடி சொல்கிறானே..

திரும்புவதற்குள் ஒரு கரம் என்னை பற்றியது.. சுதாரித்து பிரேக் போட்டேன்..

ஐயோ நான் காலி..

தரணி என்பவன் அஜானுபகுவாக இருந்தான்..

வாங்க சார் உங்க கிட்ட பேசணும்.. அவன் குரல் கர்ண கொடுரம்..

அதே வீட்டுக்குள் நான் அழைத்துச் செல்லப் பட்டேன்.. இல்லை இழுத்துச் செல்லப்பட்டேன்..

என்னை போட்டோ எடுக்க யாரவது வருவார்களா? யாரவது வாங்களேன் இப்போது பகல் நேரம்.. பிளாஷ் கூட தேவை இல்லை..

எனக்குள்ளே மனது இருந்தாலும் அது தனக்குளே பிதற்ற ஆரம்பித்தது...

உள்ளே சென்றவுடன் சாந்தமாய் ஒரு பெரியவர் குறுந்தாடியுடன்.. ஓஹோ இவர் தான் பெரிய வில்லன் போல..

என்ன தம்பி நேத்து நைட் என்னமோ போட்டோ எடுத்திங்க போல..

அவர் கேட்டவுடன் வியர்த்து..

சாரி சார்.. இதோ இந்த கேமரா தான் .. குடுக்குறேன் என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க..

ஹா ஹா ஹா.. எல்லோரும் ஏளனமாக சிரித்தார்கள்..

சரி போங்க... பிலிம் ரோலை உருவிக்கொண்டு காமெராவை தூக்கி போட்டார்..

தம்பி.. திரும்பி நடக்க ஆரம்பித்தவனை அவர் குரல் தடுத்தது...

போகிறப்போ வாசல்ல இருக்கு ஒரு போர்டு அத பார்த்துட்டு போங்க..

அப்போது தான் கவனித்தேன் பின்னால் அந்தப் பெண்.. நேற்று கழுத்து நெறி பட்டவள்..

அப்பா இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்ப? கேட்டுக்கொண்டே வந்தாள்...

தலை சுற்றியது .. சீக்கிரம் வெளியே வந்து போர்டுஐ பார்த்தேன்..

ஹைதராபாத் தமிழ் சங்கம்..
தமிழ் மணி நாடகக் குழு..
ஹைதராபாத் - 25

Hyderabad Tamil Sangam
Thamilmani Drama Troop
Hyderabad - 25

தலை சுற்றியது இன்னும் வேகமாக.. உங்களுக்கும் கூடத்தானே?